கண்டதைச் சொல்லுகிறேன்: வண்டலூரில் தமிழர்களுக்கு செருப்படி !

8.2.2014: வண்டலூரில் இன்று நடக்கும் ஆர்.எஸ்.எஸ்சின் உற்சவமூர்த்தி நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்தில் மோடியின் பேச்சை தமிழில் மொழிபெயர்ப்பவர் ஹெச்.ராஜா. இவர்தான் பெரியாரை அவன் இவன் என்றும் அப்போதே பெரியாரை செருப்பால் அடித்திருக்கவேண்டும் என்றும் பேசியவர்.  இதற்காக இன்று வரை பிஜேபி தலைவர்கள் யாரும் வருத்தமோ மன்னிப்போ கோரவில்லை. ராஜாவைக் கண்டிக்கவும் இல்லை.

இன்று இவரையே மோடியின் பேச்சை மொழிபெயர்க்க நியமித்திருப்பதன் அர்த்தம் என்ன ? பெரியாரைப் பற்றி ராஜா பேசியதை தாங்கள் கண்டுகொள்லவிரும்பவில்லை என்பதும், அப்படி பேசியது தங்கலுக்கும் உடன்படானதுதான் என்பதுமே ஆகும். இன்னும் பச்சையாக சொன்னால், ராஜாவை  இந்த முக்கியமான பொதுக்கூட்ட மேடையில்  தங்கள் பிரதமர் வேட்பாளரின் தமிழ்க்குரலாக ஒலிக்கச் செய்ததன் மூலம், பிஜேபி எல்லா தமிழர்களையும் செருப்பால் அடித்திருக்கிறது. வைகோவின் திராவிடத் தன்மானம் காவிக் கோவணத்தால் கட்டப்பட்டுவிட்டது.

————–

இதோ ஒரு சண்டைக்காரி !

சரியாகப் பதினைந்து வருடங்கள் முன்பு  சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கான மூன்று மாத நாடகப்பட்டறை நடத்தியபோது அதில் ‘சண்டைக்காரிகள்’ என்ற நாடகத்தை உருவாக்கினேன்.சரித்திரம் முழுக்கவும் தங்களுக்கான நியாயத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் வெவ்வேறு விதங்களில் சண்டையிட்ட பெண்களின் கதைகளின் தொகுப்பு அந்த நாடகம். அப்படிப்பட்ட பெண்களையெல்லாம் சமூகம் எளிதில் ‘சண்டைக்காரி’ என்ற முத்திரையை வசவாகப் பயன்படுத்தி முடக்கப்பார்க்கும். ஆனால் நமக்குத் தேவை அப்படிப்பட்ட சண்டைக்காரிகள்தான்.

நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அந்தத் தலைப்பை வைப்பதை கல்லூரி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியானால் நாங்கள் நாடகமே போடமாட்டோம் என்று எதிர்ப்போமா என்று பயிலரங்க மாணவிகள் விவாதித்தார்கள். நாடகம் நடக்கவேண்டுமென்பதுதான் முக்கியம் என்பதால், வேறு பெயரை வைக்க மறுத்து, அந்த நாடகத்தை ‘ பெயரில்லாத ஒரு தமிழ் நாடகம்’ என்று அறிவித்தோம். வரலாற்றில் பெயர்கள் விட்டுப் போன பெண்கள் பற்றியது என்பதால் இதுவும் பொருத்தமாகத்தான் இருந்தது.

ஆனால் நாடகம் முடிந்து பல வருடங்களுக்குப் பின்னரும் அதைப் பார்த்தவர்கள், நடித்தவர்கள் பலரையும் நான் சந்திக்கும்போது அதை ‘சண்டைக்காரிகள்’ என்றே குறிப்பிடுவார்கள்.  அதுதான் சாரம்.அதுதான் மனதில் பதிந்ததும். அந்த நாடகத்தின் கடைசி காட்சியில் எல்லாரும் அடுத்த சண்டைக்காரி எங்கே என்று தேடுவார்கள். வெளியிலே தேடவேண்டாம். நம் ஒவ்வொருவருக்குள்ளேயும்  அவள் இருக்கிறாள் என்பதோடு நாடகம் முடியும். எப்போதும் போல நாடகம் அரங்கில் முடிந்தாலும் வாழ்க்கை வெளியே தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறது – சண்டைக்காரிகளுக்காக.

அப்படி ஒரு சண்டைக்காரியாக இந்த வாரம் அம்மாபட்டினம் அனீஸ் பாத்திமாவை அறிந்தேன்.மதவெறிக்கு எதிரான சண்டையில் களம் கண்டு வெற்றி அடைந்தவர்.

மதவெறி என்பது எந்த தனி மதத்துக்கும் உரிய ஏகபோக சொத்து அல்ல. எல்லா மதங்களுக்கும் உரியது. மதத்தின் பெயரால், மதப் பழக்க வழக்கங்களின் பெயரால் மனிதர்களை ஒடுக்குவது, அவர்களுடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது என்பதும் எல்லா மதங்களிலும் இருப்பதுதான். பெரும்பான்மையாக ஒரு பகுதியில் இருக்கும் மதத்தில் மதவெறி நடவடிக்கையாளர்கள் வலுப் பெறத் தொடங்கினால், அது அங்கே சிறுபான்மையாக இருக்கும் மதங்களின் மதவெறியாளர்களையும் எதிர்வினைக்குத் தூண்டுவதாகவே அமையும்.உண்மையில் ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் மதவெறியர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளே அல்ல. ஒருவர் மற்றவரால் பிழைப்பவர்; பலப்படுபவர். இருவரும் அவரவர் மதங்களில் இருக்கும் சாதாரண மக்களுக்கே எதிரிகள்.

ஆனால் அந்த சாதாரண மக்கள் பொறுத்தது போதும் என்று எதிர்த்து நின்றால் மத வெறியர்களால் தாங்கமுடியாது. பின்வாங்கியே தீரவேண்டியிருக்கும். அப்படி பாகிஸ்தானில் தாலிபான்களை எதிர்த்து நின்ற  சிறுமி மலாலா இன்று உலகம் முழுவதும் மதவெறிக்கு எதிரான மக்களின் பிரதிநிதியாக ஆகிவிட்டார்.

தமிழ்நாட்டிலும் ஒரு மலாலாவாக, புதுக் கோட்டை மாவட்டம் மணமேல்குடி அம்மாப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த அனீஸ் பாத்திமா உருவாகியிருக்கிறார். கோவை அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படிக்கும் மாணவியான இவர் புரட்சிகர மாணவர் இளைஞர் அமைப்பு என்ற இடதுசாரி அமைப்பில் இருப்பவர். இவரது அண்ணன் அலாவுதீனும் அதே அமைப்பில் இருக்கிறார். அவரும் அதே கல்லூரியில் சட்டம் படித்து புதுகோட்டையில் வழக்கறிஞராக இருப்பவர்.பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்துவிட்டுச் செல்லும்போது அனீஸ் பாத்திமா சந்தித்த மதவெறியர்களின் அட்டூழியத்தையும் அதை அவர் வெற்றிகரமாக எதிர்த்து அவர்களை முறியடித்த நிகழ்ச்சியையும் , புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் ஆதரவு தளமான வினவு இணைய தளம் விரிவாக வெளியிட்டிருக்கிறது.

கடந்த ஜனவரி 27 அன்று இரவு தன் கிராமத்திலிருந்து பக்கத்து ஊரான மீமிசலுக்குப் போய் கோவைக்கு பஸ் ஏறப் புறப்பட்டார் அனீஸ் பாத்திமா. அவருக்கு துணையாகக் குடும்ப நண்பர் முத்துகிருஷ்ணன் என்பவர் உடன்சென்றார். மீமிசலில் பஸ் ஏறுவதற்காகக் காத்திருந்த சமயத்தில், பாத்திமா வேறு மத இளைஞருடன் இருப்பதைக் கண்ட சில இஸ்லாமிய மதவெறியர்கள் அவர் பஸ்சில் ஏறியபின்னர் அவரிடம் வந்து கடுமையாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். வேற்று மத இளைஞருடன் இஸ்லாமியப் பெண்கள் பேசுவதோ செல்வதோ கூடாது என்பதும் மதம் மாறித் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதும்தான் அவர்களின் ‘சமுதாயக் கவலை’.

தான் யார் என்றோ, யாருடன் எங்கே செல்கிறேன் என்பதை கேட்கவோ அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை என்று பாத்திமா பதில் சொன்னதையடுத்து தொடர்ந்து கலாட்டா செய்துள்ளனர். பஸ் கம்பெனி ஊழியர்கள் தலையிட்டு பாத்திமா வழக்கமாக அந்த பஸ்சில் செல்பவரென்று விளக்கியும், பாத்திமாவின் சகோதரர் அலாவுதீனுக்கு முத்துகிருஷ்ணன் போன் செய்து சொல்லி அவருடன் கலாட்டா செய்தவர்கள் பேசியபின்னரும், தற்காலிக சமாதானம் ஏற்பட்டு, பஸ் புறப்பட்டது. ஆனால் பஸ் கொஞ்ச தூரம் சென்றதும், சிலர் அதை டூவீலர்களில் துரத்திச் சென்று தடுத்து மீண்டும் பாத்திமாவுடன் தகராறு செய்தனர்.பாத்திமா எதற்கும் அசரவில்லை. போலீசை வரச் சொல், பார்த்து கொள்வோம் என்று சவால் விடுத்தார். பொது இடத்தில் நடந்த சச்சரவால் கூட்டம் கூடி, போலீசும் வந்துவிட்டது.

போலீஸ் வந்ததும் மதவெறி இளைஞர்கள் பலர் காணாமற் போய்விட்டார்கள். எஞ்சியிருந்தவர்களை போலீஸ் விசாரிக்கும்போதே, புகார் தரவேண்டாமென்று பாத்திமாவை , தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஜமாத் ஆகியவற்றின் பிரமுகர்கள் வந்து வற்புறுத்தத் தொடங்கியதாக வினவு தெரிவிக்கிறது. ஆனால் பாத்திமா கடைசி வரை உறுதியாக இருந்து போலீசில் புகார் எழுதிக் கொடுத்தார். அவரை அதன் பின் வீட்டுக்கு போலீசாரே பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

மறு நாள் நடந்த சமரசப் பேச்சு வார்த்தையில் பாத்திமா புகாரை திரும்பப் பெற உறுதியாக மறுத்தார். போலீஸ் கைது செய்து வழக்கு தொடர்ந்தால், தவறு செய்த இளைஞர்களின் எதிர்காலமே பாழாகிவிடும் என்று மன்றாடப்பட்டது. அதையடுத்து 1. மதத்தின் பெயரால் தாங்கள் இழைத்த கொடுமைக்காக பொதுமக்கள் முன்னிலையில் அனிஸ் பாத்திமாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். 2.மத உரிமை என்ற பெயரில் இனி யாருடைய தனி உரிமையிலும் தலையிடமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்; இவற்றையே கடிதமாகவும் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை கலாட்டா செய்த இளைஞர்கள் ஏற்றுக் கொண்டனர். இதை பாத்திமா ஒப்புக் கொண்டார். அதையடுத்து பிரச்சினை நடந்த ஊரின் பொது இடத்தில் மக்கள் முன்னால் ஐவரும் பாத்திமாவிடம் மன்னிப்பு கேட்டார்கள். கடிதமும் தரப்பட்டது.

பாத்திமா கடைசி வரை பிடிவாதமாக எதிர்த்துப் போராடக் காரணம், அவர் ஒரு இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டுவருபவர் என்பதால் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய தெளிவுதான். இந்தத் தெளிவு தங்கள் பெண்களுக்கு வந்துவிடக்கூடாது என்றுதான் மதவெறியர்கள் எப்போதும் பயப்படுகிறார்கள். அதனால்தான் பெண்களைப் படிக்க வைக்க அனுப்புவதையே எதிர்க்கிறார்கள். அனுப்பினாலும், தனியே பெண்கள் பஸ்சில் சென்று, பெண்கள் கல்லூரியில்  இதர ஆண்கள் வாடையே இல்லாமல் படிக்கவைக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறார்கள்.

பாத்திமாவின் சகோதரரும் இடதுசாரி அமைப்பில் இருப்பவர் என்பது இன்னொரு காரணம். சமத்துவம், நியாயம் ஆகியவற்றுக்காக குரல் கொடுக்க முன்வரும் பெண்களை முதலில் காலைப் பிடித்துப் பின்னால் இழுப்பது நம் குடும்ப அமைப்புதான். மலாலாவின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது மலாலாவின் அப்பா ஜியாவுதீனின் பங்களிப்பும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.கல்வியாளரான ஜியாவுதீன் மலாலா குழந்தையாக இருந்த நாளிலிருந்தே தாலிபான்களை எதிர்ப்பவர் என்பதும் பெண் கல்விக்காக பள்ளிகள் நடத்தி வந்தவர் என்பதும் முக்கியமானவை.

சாதி, மத வெறியர்களின் முதல் கவலை தங்கள் சாதி, மதப் பெண்கள் வேறு சாதியில் மதத்தில் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதேயாகும். இந்தக் கவலை எல்லா சாதிகளிலும் மதங்களிலும் இருக்கும் வெறியற்ற மனிதர்கள் பலரிடமும் உண்டென்றாலும் கூட, இதற்காக தீவிர வழிகளைப் பின்பற்றுபவர்கள் வெறியர்களே ஆவர். பிற மத, சாதி ஆண்களைத் தங்கள் பெண்கள் சந்திக்கவும் பேசவும் பழகவும் விடாமல் தடுத்துவிட்டால் நல்லது என்பதே இவர்கள்  கருதும் தீர்வு. இந்தப் பார்வையில்தான் இன்று ஒவ்வொரு சிறு நகரத்திலும் கிராமங்களிலும் சாதி வெறி குழுக்களும் மதவெறிக் குழுக்களும் தம் இனப் பெண்களை தொடர்ந்து கண்காணிப்பது, மிரட்டுவது, குடும்பத்தின் மூலம் அழுத்தம் தருவது என்றெல்லாம் செயல்களில் ஈடுபடுகின்றன. பெரு நகரத்தில் இது சாத்தியமில்லை. அதனால்தான் சிறு ஊர்களிலிருந்து பெருநகர்களுக்கு வரும் வாய்ப்புள்ள பெண்கள் திரும்ப ஊருக்குச் செல்ல விரும்புவதில்லை. நகரம் தரும் சுதந்திரக் காற்றை சுவாசித்தபின்னர் ஊரின் சாதிமத முடை நாற்றம் வீசும் சூழலில் மூச்சுத் திணற யார்தான் விரும்புவார்கள் ?

அனிஸ் பாத்திமா கோவை போன்ற பெருநகரில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றதும், இடதுசாரி இயக்கத்தில் அண்ணன் பங்கேற்பதையடுத்து தானும் பங்கேற்றதும் அவருக்கு அமைந்த நல்வாய்ப்புகள். அவைதான் அவரை மதவெறியர்களுக்கு எதிராக இரவு நேரத்தில் தனியே பயப்படாமல் போராடவைத்திருக்கின்றன. ஆணோ பெண்ணோ 18 வயதை எட்டியபின்னர், அவர் யாருடன் பேசுகிறார், யாருடன் பழகுகிறார், யாருடன் வெளியே செல்கிறார் என்றெல்லாம் கட்டுப்படுத்தும் உரிமை அவரவர் குடும்பத்துக்கே கிடையாது. எங்களைச் சார்ந்து இனியுமிருக்காதே என்றுதான் அதிகபட்சம் குடும்பம் சொல்லமுடியும். பாத்திமா அடைந்திருக்கும் வெற்றி அவர் வட்டாரத்தில் இருக்கும் இதர அவர் மதப் பெண்கள் எல்லாருக்கும் பயன் தரக்கூடிய வெற்றி. இனி அங்கே வேறு எந்தப் பெண்ணிடமும் மதவெறியர்கள் இது போல நடந்துகொள்ளமுடியாது.

நாம் கவலைப்படவேண்டிய அம்சங்கள் இதில் இன்னும் சில உள்ளன. பாத்திமாவைப் போல ஒவ்வொரு பெண்ணும் பொது இடத்தில் தனக்கு அநீதி நடக்கும்போது அதை எதிர்த்து சண்டையிட்டால், அதை ஆதரிக்கும் பொதுப் புத்தி நம் சமூகத்தில் இன்னமும் இல்லை. பெண்ணை ‘அட்ஜஸ்ட்’செய்துகொண்டு போகச் சொல்வதும், என்ன இருந்தாலும் ஒரு பெண் இவ்வளவு துணிச்சலாக இருக்கக்கூடாது என்று புத்தி சொல்வதும்தான் பெரும்பான்மை அணுகுமுறையாக இருக்கிறது. இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் இதர பெண்கள் உதவிக்கு வராமல் ஒதுங்கிப் போவதும், வரக்கூடிய ஓரிருவர் புத்தி சொல்பவருமாக இருப்பதுமாகும்.

அரசியல்ரீதியாக கவலைக்குரிய அம்சம், இதில் ஈடுபட்ட மதவெறி இளைஞர்கள் அரசியல், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதுதான். ஒரு கட்சியாக, அமைப்பாக இருக்கும் பல இயக்கங்கள் பொதுவெளியில், ஊடகங்களில் பல நியாயமான சமூக அக்கறையுள்ள விஷயங்களை முன்வைப்பதும் அவற்றின் தலைவர்கள் கண்ணியமாக அவற்றை பேசுவதும் ஒரு புறம் நடக்கும் அதே சமயத்தில், அதே அமைப்புகளின் கீழ் மட்டத்தில் நேர் எதிரான அராஜகப் போக்குகளும் கட்டப் பஞ்சாயத்துகளும், பாசிச, நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் சகஜமாக செயல்படுவதைப் பார்க்கிறோம். அது மட்டுமல்ல, அத்தகைய செயல்பாடுகளின் அடிப்படையில்தான் அந்த இயக்கங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்பதும் மேற்பூச்சாக இருக்கும் கண்ணியமெல்லாம் இதை மறைக்கும் உத்தி மட்டுமே என்றும் தோன்றுகிறது.

மிக அண்மையில் பி.ஜே.பியின் மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜாவின் வீடியோவைப் பார்த்தபோது அதில் அவர் பெரியாரை அவன் இவன் என்றும் அவரை அப்போதே செருப்பால் அடித்திருக்கவேண்டாமா என்றும் ஆவேசமாகப் பேசியிருப்பதைக் கண்டபோது, மதவெறி என்பது இவர்கள் எல்லாரையும் தற்காலிகமாக மட்டுமே கண்ணியமாக நடக்கச் செய்யும் சக்தி என்பது புரிகிறது. வேறெப்போது இருந்ததையும் விட இப்போது தமிழ்நாட்டில் சாதி அமைப்புகள், மத அமைப்புகள் அரசியல்களத்தில் பலமாக இறங்கியிருப்பது மட்டுமல்ல, மிகவும் பிற்போக்கான பார்வையுடன் கீழ்மட்டத்தில் செயல்படவும் செய்கின்றன. அது எதுவும் ஊடகங்களின் பத்திரிகைகளின் கவனத்துக்கும் ஆய்வு அலசல்களுக்கும் வராமல், மேல்மட்ட தலைவர்களின் கண்ணியமான சண்டைகள் மட்டுமே செய்திகளாகின்றன.

இந்தச் சூழ்நிலையில் அதிகம் பாதிப்புக்குள்ளாகக்கூடியோர் ஒவ்வொரு சாதியிலும் மதத்திலும் இருக்கக்கூடிய பெண்கள்தான். ஏதாவது ஒரு சாக்கின் மூலம் அவர்களை வீட்டுக்குள்ளேயோ அல்லது குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயோ முடக்கிவைக்கும் முயற்சிகளுக்கு சாதி,மத அரசியல்தளம் இன்று சார்பானதாக இருக்கிறது.  இதில் ஒரு அனீஸ் பாத்திமாவின் சண்டைக்குரல் ஆறுதலாக ஒலித்திருக்கிறது. இந்த வருடப் பூச்செண்டு பாத்திமாவுக்கு. இன்னும் பல சண்டைக்காரிகள் வெளியே வரவேண்டும்.

apology-letterகல்கி 8.2.2014 இதழில் வெளிவந்த கட்டுரையின் முழுவடிவம்.

 

 

 

 

 

 

 

 

 

 

இனி படக் கதைதான் !

இன்றி அறிமுகமான புதிய நண்பர் ராமனிடம் கற்றுக் கொண்டு இந்தப் படத்தை வெளியிடுகிறேன். மதுவிலக்கு கோரி போராடி வரும் காதியர் சசிபெருமாள் அவர்களை மெரினா கடற்கரையில் சந்தித்து வாழ்த்தியபோது எடுத்த படம். IMG_6989

கேணி சந்திப்பு: பிப்ரவரி 9

கேணி சந்திப்பு: பிப்ரவரி 9, ஞாயிறு மாலை 4 மணி. ‘சம கால அரசியலை இலக்கியத்தில் பிரதிபலித்தல்’ பற்றி எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் உரை. கூடுதல் பங்கேற்பு: எழுத்தாளர் தமிழ்மகன்.இடம்: 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78. அனைவரும் வருக. ஞாநி, பாஸ்கர் சக்தி.

கண்டதைச் சொல்லுகிறேன் : திடீர் புதையல்….!

6.2.2014: பல காலமாகத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் திடீரென விரல் நுனியில் தட்டுப்பட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ? அதை நேற்று இரவு அனுபவித்தேன்.

பியூனா வீஸ்டா சோஷியல் க்ளப் என்று ஒரு டாக்குமெண்டரி படம்.பியூனா வீஸ்டா என்பது ஸ்பானிஷ் மொழி.நல்ல காட்சி என்று பொருள். இந்த சினிமாவை 1999 கடைசியிலோ 2000 ஆரம்பத்திலோ பார்த்தேன். அதில் இருக்கும் இசை என்னை மிகவும் கவர்ந்தது. அதன்பின் பத்துப் பதினான்கு வருடங்களாக அந்த இசையைத் தேடி கொண்டிருக்கிறேன். எந்த மியூசிக் ஸ்டோருக்குப் போனாலும் அந்தப் படத்தின் டிவிடியோ இசை ஆல்பமோ இருக்கிறதா என்று தேடுவேன். அமெரிக்காவில், ஐரோப்பாவில் கூட தேடினேன். எங்கேயும் எனக்கு அது தட்டுப்படவில்லை.

நேற்று இரவு, என் ஐமேக்கில் எனக்குத் தெரியாமல் சில நண்பர்கள் போட்டுவைத்திருக்கும் ஃபைல்களை எல்லாம் குப்பைக்கூடைக்கு அனுப்பும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, நண்பர் கரு.அண்ணாமலை போட்டு வைத்திருந்த சினிமாக்கள் தொகுப்பைப் பார்த்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட உலக சினிமா இயக்குநர் வாரியாகப் போட்டிருந்தார். அதில் தற்செயலாக விம் வெண்டர்சின் படங்கள் என்ன என்று பார்த்தால், முதலில் இருந்தது பியூனா விஸ்டா சோஷியல் க்ளப் ! அப்போது இரவு 11.30 மணி. ஆனால் உடனே அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவலில் உட்கார்ந்தேன். ஒண்ணே முக்கால் மணி நேரப் படம். 15 வருடங்கள் முன்னால் பார்த்தபோது கிடைத்த அதே மகிழ்ச்சி இப்போதும் கிடைத்தது. அடுத்த மகிழ்ச்சி -படம் முடிந்ததும், இசை ஆல்பத்தை ஆப்பிள் ஸ்டோரில் தேடிக் கண்டுபிடித்ததாகும். உடனே வாங்கிவிட்டேன். காலையில் அதைக் கேட்டுக் கொண்டேதான் இதை எழுதுகிறேன் !

பியூனா வீஸ்டா சோஷியல் கிளப் என்பது 40களில் கியூபாவின் ஹவானாவில் இருந்த ஒரு இடம். அன்றைய கியூபாவில் இப்படிப்பட்ட கிளப்கள்  இன, மொழி, அடிப்படையில் நிறைய இருந்தன. பியூனா வீஸ்டாவில் கியூபாவின் மரபான நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் கூடி வாசிப்பதும் நடனம் நடத்துவதுமாக அது கலைஞர்களின் கிளப்பாக இருந்தது. சில ஆட்சி மாற்றங்களுக்குப் பின் இந்த கிளப்கள் இல்லாமல் போய்விட்டன. இசைக் கலைஞர்கள் வெவ்வேறு வேலைகளில் பிழைத்துக் கொண்டிருந்தார்கள். ஷூ பாலீஷ் போட்டுப் பிழைத்துக் கொண்டிருந்தார் ஒருவர். இசை மட்டும் ஏதோ ஒரு வடிவில் அவர்களுக்குப் பொழுதுபோக்காகத் தொடர்ந்தது. சுமார் 50 வருடத்துக்குப் பின் தொண்ணூறுகளில் அமெரிக்க கிடாரிஸ்ட் ரை கூடர் கியூப இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்துடன் ஹவானாவுக்கு சென்றார். அப்போது  பியூனா வீஸ்டா கிளப்பின் பழைய கலைஞர்களை தற்செயலாகக் கண்டறிந்தார். ஒருவர் மூலம் மற்றவர் என்று பலரை ஒன்றுதிரட்டிவிட முடிந்தது.  எல்லாருக்கும் அப்போது வயது 70 லிருந்து 90 வரை ! அவர்களோடு சேர்ந்து ரை கூடர் உருவாக்கிய ஆல்பம்தான் ப்யூனா வீஸ்டா கிளப் ஆல்பம்.

அது வெளியானதும் அமெரிக்காவையே அதிரவைத்தது. கியூபாவை விட்டே வெளியே அதுவரை சென்றிராத பலரையும் கூடர் ஆம்ஸ்டர்டேமுக்கும் நியூயார்க்குக்கும் அழைத்துப் போய் கச்சேரிகள் நடத்தச் செய்தார். இந்த அனுபவங்களை எல்லாம் கூடர் கூடவே இருந்து பதிவு செய்த ஜெர்மன் இயக்குநர் விம் வெண்டர்ஸ் உருவாக்கிய ஆவணப்படம் பியூனா வீஸ்டா கிளப். படம் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் நாமினேஷனைப் பெற்றது. பல விழாக்களில் விருது வாங்கியது. ஆல்பம், கிராமி விருதைப் பெற்றது. ஏறத்தாழ இசையை விட்டே ஒதுங்கிப் போயிருந்த  பழைய கியூபா கலைஞர்கள் தொடர்ந்து  ஆல்பங்கள் வெளியிடும் வாய்ப்பு ஏற்பட்டது. கியூபாவின் இசை உலக இசை அரங்கில் புது இடத்தைப் பெற்றது.

விம் வெண்டர்சும் ரை கூடரும் சாதாரண ஆட்கள் அல்ல. இருவரும் ஃபார்முலாவிலிருந்து மாறுபட்ட  படைப்புகளை உருவாக்கக்கூடிய கலைஞர்கள். விம் வெண்டர்ஸ் விங்ஸ் ஆஃப் டிசையர் படத்தால் முதலில் கவனம் பெற்றவர். லூமியர் சகோதரர்கள் சினிமாவைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்வதற்கு ஒரு மாதம் முன்பு அதே போன்ற கருவியை கண்டுபிடித்து அறிமுகம் செய்த ஸ்காலடனாவ்ஸ்கி சகோதரர்களைப் பற்றி ஆவணப்படம் எடுத்தவர். புகைப்படம் எடுப்பது, ஆவணப்படங்கள் , கதைப்படங்கள் எடுப்பது, நேரடி நிகழ்வுகளை இயக்குவது எனப் பல விதங்களில் செயல்படும் வெண்டர்ஸ் எழுபது வயதிலும் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். அண்மைக்காலமாக ஆவணப்படங்களைக் கூட த்ரீ டியில்தான் எடுப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பவர். கிடாரிஸ்ட் ரை கூடர், மிக் ஜாகர்,  ரோலிங் ஸ்டோன்ஸ், எரிக் க்ளாப்டன், பாப் டைலன் எனப் பல புகழ் பெற்ற இசை ஆளுமைகளுடன் சேர்ந்து இசைத்தவர். இந்திய இந்துஸ்தானி இசைக் கலைஞர்களுடன் சேர்ந்தும் ஒரு ஆல்பம் உருவாக்கியிருக்கிறார். லத்தீன் அமெரிக்க வேர் இசையில் ஈடுபாடு உடையவர். அரசியல் பார்வை உடையவர். சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

பியூனா வீஸ்டா கிளப் படமும் இசையும்  கலை ரசனையும் சமூகப் பார்வையும் உடையவர்கள் தவறவிடக்கூடாதவை. முதிர்ந்த வயதிலும் தங்கள் இசையில் லயித்து பாடும் இசைக்கும் அந்த கியூபா கிழவர் கிழவிகளைப் பார்ப்பதும் கேட்பதும் நிச்சயம் அருமையான அனுபவம்.

——

 

 

ஞாநி பதில்கள் – சூரியகதிர் பிப்.2014

சொர்ணவள்ளி, திருவண்ணாமலை.

டெல்லி லஞ்சப் புகார் ஹெல்ப் லைன் தொலைபேசிக்கு 7 மணி நேரத்தில் 4 ஆயிரம் அழைப்புகள் வந்ததாமே ?

போன் போட்டு என்னைப் பத்தி புகார் சொல்லிடாதீங்கன்னு அதுக்கு லஞ்சம்குடுக்க ரெடியாயிருப்பாங்க இத்தனை நேரம்… அந்தக் கணக்கை எடுத்தா இன்னும் ஏழாயிரம் தேறலாம். புகார் குடுக்க பொதுவா பயப்படற ஜனங்க எண்ணிக்கைதான் எப்பவும் அதிகம். அதைக் கணக்கு செஞ்சா பல ஆயிரம் இருக்கும். மொத்ததுல வந்திருக்கறது பெரு வெள்ளத்துல ஒரு சிறு துளிதான்.

முத்துக்குமார், விழுப்புரம்.

இனி காங்கிரஸின் எதிர்காலம்?

காங்கிரசை அவ்வளவு எளிதில்  அழித்துவிடமுடியாது என்பதுதான் யதார்த்தம். நேரு குடும்பம் ஒதுங்கியிருந்த காலத்தில் கூட காங்கிரஸ் அழிந்துவிடவில்லை. வேறு சில கட்சிகளைப் போல அது முற்றிலும் தனி நபரை சார்ந்து இயங்குவதல்ல. வரலாற்று ரீதியாக காங்கிரசுக்கு சில வலிமைகள் இருக்கின்றன. சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட பிரிவினரும் அதில் சேர்ந்து இயங்கமுடியும் என்பது விடுதலைப் போர் காலத்தில் ஏற்பட்ட அடையாளம். அந்த வலிமை அதற்கு இன்னும் தொடர்கிறது. காங்கிரஸ் கொஞ்சம் திருந்தினால் கூட பழைய வலிமையை அடைந்துவிடும். திருந்துமா என்பதுதான் கேள்வி.

கணேசன், மதுரை.

இந்திய தூதரக அதிகாரி தேவயானியின் வெளிநாட்டு மோகத்தை நம்மவர்கள் யாரும் தட்டிக்கேட்டதாக தெரியவில்லையே?

தேவயானி சார்பாக முழு அதிகார வர்க்கமும் ஒன்று திரண்டு நின்று ,பணிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைப்பதில் பெரும் வெற்றி பெற்றதே காரணம்.

சுந்தரம், சென்னை.

அழகிரி பேட்டி பற்றிய கேள்விக்கு, ‘ தேவையற்ற செய்திகளை நான் படிப்பதும் இல்லை. பார்ப்பதும் இல்லை’ என்கிறாரே ஸ்டாலின்?

ஆம். கட்சியில் அழகிரி இருப்பதே ஸ்டாலினுக்கு தேவையற்ற விஷயம்தானே.

முகம்மது, சென்னை.

விளையாட்டு ஊழல் குறித்து விசாரிக்க சி.பி.ஐ தனிப் பிரிவை விரைவில் தொடங்க இருப்பதாக சிபிஐ இயக்குநர் ரஞ்ஜித் சின்ஹா தெரிவித்துள்ளாரே?

இப்படியே பிரிவுகள் தொடங்கினால், சி.பி.ஐ இன்னொரு அரசாங்கம் போல பிரும்மாண்டமானதாகிவிடும். எனேன்றால் ஒவ்வொரு துறையிலும்தான் ஊழல் நடக்கிறது. பேசாமல், அரசாங்கமே தன் ஒவ்வொரு துறையிலும் ஒரு சி.பி.ஐ. பிரிவை ஏற்படுத்திவிடலாம்.

சுப்புராஜா, சேலம்.

ஆந்திராவில் எம்.எல்.ஏ. ஒருவர் சோனியாவிற்கு வெண்கலத்தில் சிலை வடித்து அதற்கு தெலுங்கானாதாய்’ என்றும் பெயர் வைத்திருக்கிறாராமே?

முட்டாள்கள் எல்லா மொழிகளிலும் எல்லா இனங்களிலும் எல்லா தேசங்களிலும் உண்டு என்பதற்கு அவ்வப்போது இப்படி நிரூபணங்கள் கிடைக்கின்றன.

விநாயகம், விக்கிரமசிங்கபுரம்.

பாதுகாப்புத்துறைக்கு ரூ.3,600 கோடி மதிப்பிலான சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கு பற்றி?

ராணுவத் துறை ஊழல்களுக்கென்ரே தனி புலனாய்வுப் பிரிவு தொடங்கவேண்டிய அவசியம் இருக்கிறது. ராணுவ பட்ஜெட்டைக் கடுமையாக்கக் குறைத்தால், ஊழலையாவது குறைக்கலாம்.

ராமசாமி,சென்னை.

பா.ஜ.க.வில் சுப்ரமணியன்சாமி வந்து சேர்ந்த நாள் அக்கட்சிக்கு ஒரு கறுப்புநாள் என்கிறாரே தமிழருவி மணியன்?

கட்சியிலேயே இல்லாமல் கட்சி வேலை பார்க்கும் மணியனுக்கு இதையெல்லாம் சொல்ல ஏது தகுதி ? தவிர பா.ஜ.க என்ற கட்சி சுப்பிரமணியன் சுவாமியை நீக்கிவிட்டால் புனிதமான கட்சியாகிவிடுமா என்ன ? ஒரே குட்டையில் இருக்கும் பல மட்டைகளில் சுவாமியும் ஒரு மட்டை. அவ்வளவுதானே

தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிப்பது ஜனநாயக நடைமுறை ஆகாது, மாறாக அது வெறும்,தனி நபரை பிரபலப்படுத்தும் முயற்சியாகும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாரே?

சொல்லியிருப்பது ராகுல் என்றாலும் கருத்து சரியான கருத்துதான்.

ரமேஷ், சேலம்.

காங்கிரஸுக்கு பெரிய அளவில் சவால் விட எந்த கட்சியும் உருவாகவில்லை என்கிறாரே சுஷில்குமார் ஷிண்டே?

உண்மைதான். அதுதான் இப்போதைக்குக் காங்கிரசைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. தவிர காங்கிரசை பலவீனப்படுத்த  வெளி சக்திகள் வேலை செய்வதை விட உள் சக்திகளே போதுமானவை.

மோகன், கரூர்.

பா.ஜ.க. – ம.தி.மு.க. கூட்டணி பற்றி?

மோடியை தான் இப்போது பிரதமராக்கினால் நாளை மோடி தன்னை முதல்வராக்க  உதவுவார் என்ற தப்புக் கணக்கில் வைகோ தன் தொண்டர்களை அடகு வைத்திருக்கிறார். மீட்க முடியாமல் முழுகிப் போகும் வாய்ப்பே அதிகம்.

கவிதா, சென்னை.

தி.மு.க.வில் ஸ்டாலின் -அழகிரி இடையே வாரிசு சண்டை உச்சகட்டம் அடைந்துவருகிறதே?

உச்சகட்டம் எல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது. தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன்மொழிவேன் என்று கலைஞர் கருணாநிதி அறிவித்தபோதே பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. வில்லனாக நம்பியார் நடித்தால், கடைசி சீனில் கௌரவமாக போலீசிடம் கையை நீட்டி விலங்கு வாங்கிக் கொண்டு போவார். வில்லனாக வடிவேலு நடித்தால் எப்படியிருக்கும் ? அதுதான் இப்போது நடப்பது.

செல்வராஜ், மதுரை

தி.மு.க.விலிருந்து அழகிரியை நீக்கியது கூட கருணாநிதியின் ராஜ தந்திரம் தானே?

அவரது அறிவாலோ திட்டமிடுதலாலோ இதெல்லாம் நடக்கவில்லை. இயற்கையின் சதிதான் இது. தயாளு அம்மையார் மட்டும் உடல்நலம் குன்றாமல் இருந்திருந்தால், கலைஞர் கருணாநிதி  தொடர்ந்து அழகிரியை சமாதானம் செய்து சமாளிக்கும் ராஜதந்திரத்தை மட்டுமே திரும்பத்திரும்பச் செய்யவேண்டியிருந்திருக்கும்.

சக்திவேல், திருச்சி.

தமிழக மீனவர்களால் எங்களது மீன்வளம் பாதிக்கப்படுகிறது என்ற இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு குறித்து?

உண்மைதான். கூடவே தமிழக்மீனவர்களுக்கான மீன்வளமும் பாதிக்கப்பட்டிருக்கிரதுஎன்ர உன்மையை சேர்த்தே பார்க்கவேண்டும். பிரும்மாண்டமான ஆழ்கடல் மீன் பிடிக் கப்பல்களை தமிழக மீன் முதலாளிகள் பயன்படுத்திவருவதால், இரு பகுதிகளிலும் உள்ள எல்லா சிறு மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சூழல் பாதிக்கப்பட்டு மீன்வளமும் குன்றி வருகிறது. இதைப் புரிந்துகொண்டு எல்லா மீனவர்களுக்கும் சாதகமனதாகவும் எல்லாரும்  ஏற்கக்கூடியதாகவும் ஒரு  தீர்வை கண்டுபிடிக்காமல், இதை தமிழ்- சிங்கள அரசியல் மோதலுக்கு எல்லா தரப்பினரும் பயன்படுத்திவருவதுதான் சிக்கலை நீடிக்கிறது.

ச.மீனாட்சிசுந்தரம், தானே மேற்கு.

மத்திய அமைச்சர் சசிதரூரின் 3-வது மனைவி சுனந்தாவின் மரணத்தில் தொடர்ந்து சர்ச்சை நீடிக்கிறது. அவர் இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடியுள்ளாராமே?

உயர் அதிகாரம், பெரும்பணம் இவற்றின் பிடியில் வாழ்க்கை நடத்தும் பலருடைய வழ்க்கை கடும் மன உளைச்சலிலும் முதிர்ச்சியின்மையாலும் மெய்யான நண்பர்கள் அற்ற தனிமையாலும் பாதிக்கப்படுகிறது. சுனந்தாவும் அப்படிப்பட்ட பாதிப்புக்கு உள்ளானவர்.இதை துப்பறியும் கதை மாதிரி படிக்கத் தேவையில்லை.

பாலன், திருவண்ணாமலை.

அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியை ஒழித்துக்கட்டவே அவரின் அரசை ஆதரிக்கிறோம் என்கிறாரே டெல்லி ஓக்லா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.?

பகையாளியை உறவாடிக் கெடு என்பது பழைய அறிவுரைதான். அதை காங்கிரஸ் மட்டுமல்ல, ஆம் ஆத்மியும் சேர்ந்தே பின்பற்ற முடியும் என்பதை  ஓக்லா எம்.பி மறந்துவிட்டிருக்கிறார்.

ச.மீனாட்சி சுந்தரம், மாஜிவாடா (நாகா).

குஜராத் கலவரம் தன்னை முற்றிலும் அதிர்ச்சியடைய செய்துவிட்டது என்று மோடி கூறுவதில்.. ஷாக் அவருக்கா? இல்லை நமக்கா?

நாமும் ஷாக் ஆகத் தேவையில்லை. “இந்நாளில் பொய்மைப் பார்ப்பார், இவர் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார்’ என்று பாரதி சொல்வது மோடிகளுக்குப் பொருந்தும். எப்படியும் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று துடிக்கும் மோடியும் பி.ஜே.பியும் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னவெல்லாமும் சொல்லத் தயாராக இருப்பார்கள்.

பாலாஜி, சென்னை.

என்னை நம்பி வந்தவர்களை எப்போதும் கைவிடமாட்டேன் என்கிறாரே அழகிரி?

இதெல்லாம் மிராசு- பண்ணையார் ரகப் பேச்சு. ஓட்டு போட்டு இவரையும் இவர் கட்சியையும் ஆட்சிக்கு அனுப்பியவர்கள் எல்லாம் இவர்களை நம்பி வந்தவர்கள் இல்லையா ? அடியாட்களாக எடுபிடிகளாக சுற்றி நிற்போர் மட்டும்தான் நம்பி வந்தவர்களா?

முத்துக்குமாரசாமி, தென்காசி.

பீகாரில் லஞ்சப் புகாரில் சிக்கிய 576 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளாரே?

நல்ல நடவடிக்கை. இத்துடன் விடாமல், குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டனை பெறச் செய்யவேண்டும். இல்லாவிட்டால், சில வாரங்களிலோ மாதங்களிலோ பழையபடி வேலைக்குத் திரும்பி வந்துவிடுவார்கள். எல்லாம் கண்துடைப்பாக மாறிவிடும்.

ஆரோக்கியராஜ், தஞ்சாவூர்.

தாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அமல்படுத்தியுள்ள நெருக்கடி நிலையை எதிர்த்து எதிர்க் கட்சியினரும் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனரே?

உலகத்தில் ஜனநாயக ஆட்சி முறை என்பது சில நூறு வருடங்களாக மட்டுமே முயற்சிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எதேச்சாதிகார, குழுத்தலைவர், அரசர் என்ற வழிமுறைகளே இருந்துவந்திருக்கின்றன. ஜனநாயக முறையிலும் பழைய கூறுகளைக் கைவிடாமல் இருக்கும் போக்கு இன்னும் கீழை நாடுகளில் கணிசமாகவே இருக்கிறது. எனவே பிரதமர்கள் நெருக்கடி நிலை அறிவிப்பதும் அதை எதிர்த்து பிரஜைகள் போராடுவதும் தவிர்க்க இயலாதவை.

அருள்ராஜ், சென்னை.

அமேதியில் தேர்தல் பிரசாரம் செய்ய சென்ற ராகுல் காந்திக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப்பட்டிருக்கிறதே?

கறுப்புக் கொடி காட்டுவது ஜனநாய்க ரீதியிலான எதிர்ப்பு, அதில் ஒரு தவறும் இல்லை. தேர்தல் நேரத்தில் எதிரிகளை பலவீனப்படுத்த இப்படிப்பட்ட உத்திகளைக் கட்சிகள் கையாள்வது இயல்பு.

சூரியகதிர் பிப்ரவரி 2014

ஞாநி பதில்கள்/காக்கைச் சிறகினிலே

1 தங்களுக்கு காவல்துறை ஒத்துழைக்க முற்றிலும் மறுப்பதாகவும், எனவே காவல் துறையை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று தெருவில் அமர்ந்து ஒரு முதல்வர் போராடுகிறார். தில்லி யூனியன் பிரதேசத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறையை ஒருபோதும் கொண்டு வர முடியாது என்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் மறுக்கிறார். ஒத்துழைக்க மறுக்கும் காவல்துறையை வைத்துக் கொண்டு தில்லி மாதிரி இடங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்துவிட முடியுமா? என்னதான் இதற்கு தீர்வாக முடியும்? – கருப்பையா, சேலம்.

இதில் மூன்று அம்சங்கள் உள்ளன. முதல் அம்சம் ஒரு மாநில முதல்வர் தெரு மறியல் செய்து மத்திய அரசுக்கு எதிராகப் போராடலாமா என்ற கேள்வி. வன்முறை இல்லாமல் அறவழியில் போராடும்வரை இப்படிப்பட்ட போராட்டங்களை நான் எதிர்க்கமாட்டேன். இதுவரை முதலமைச்சர்கள் மாநில உரிமைகளுக்காகக் கடிதம் எழுதுவது, உண்ணாவிரதம் இருப்பது, மாநிலம் முழுவதும் அரசின் சார்பிலேயே முழு கடை அடைப்பு செய்வது என்று போராடியதையெல்லாம் விமர்சிக்காமல் தெருவுக்கு வந்து ஒரு முதல்வர் போராடும்போது மட்டும் விமர்சிப்பது உள்நோக்கம் உடையது. சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை தூண்டிவிட்டு அவர்கள் ஆதரவில் பதவிக்கு வந்திருக்கும் ஒரு கட்சியும் முதல்வரும், தங்களால் சிலவற்றைச் செய்யமுடியாமல் அதிகாரம் மத்திய அரசிடம் குவிந்து கிடக்கும்போது, அந்த இயலாமையைப் பற்றி மறுபடியும் சாதாரண மக்கள் முன்னால்தான் விவாதிக்க வேண்டும். அந்த விவாதத்தை மேட்டுக்குடியினர் அளவில் நிறுத்திக் கொண்டால் விமர்சனம் வராது. சாதாரண மக்களிடம் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் எடுத்துச் சொன்னால், அதை நம் அமைப்பை கட்டுப்படுத்தும் பெருந்தலைகளால் தாங்கமுடியாது. அணு உலைகள் ஆபத்தானவை என்று அறிவுஜீவிகள் மத்தியில் எவ்வளவு விவாதித்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள், அதே விஷயங்களை சாதாரண மனிதர்களிடம் தெரிவித்து அவர்களைத் திரட்டினால் போலீசையும் ராணுவத்தையும் கொண்டு ஒடுக்குவார்கள். பிரச்சினைகளுக்கான அசல் காரணங்கள்  பெருவாரியான மக்களிடம்  போய் சேர்ந்துவிடக்கூடாது என்றே எப்போதும் அரசியல், கலாசார அமைப்புகளின் தலையில் உட்கார்ந்திருப்பவர்கள் நினைப்பார்கள். அவர்களால் ஒரு முதல்வர் சரியான காரணத்துக்காக சாலை மறியல் செய்வதை சகிக்க முடியாதுதான்.

இரண்டாவது அம்சம் அந்தக் காரணம் என்ன என்பதாகும். டெல்லி இந்தியாவின் தலைநகரம் என்பதால் அதன் பாதுகாப்பை தன் வசமே மத்திய அரசு வைத்துக் கொள்ளும் என்ற தர்க்கத்தில் அடிப்படையில் டெல்லி மாநில அரசுக்கு அங்கிருக்கும் காவல் துறையின் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை. தலைநகரின் பாதுகாப்பு மட்டும் தன் பொறுப்பு என்று மத்திய அரசு நினைப்பது நியாயமே அல்ல. தலைநகரின் குடிநீர், மின்சாரம், சாலை, கல்வி, சுகாதாரம் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்காமல் காவல் வேலையை மட்டும் எடுப்பதுஎப்படி நியாயம் ? ஏல்லாவற்றையும் ஏன் எடுக்கவில்லை ? எல்லாமே அதன் வசம்தான் ஒரு காலத்தில் இருந்தன. யூனியன் டெரிட்டரியாக ஆக்கி அந்த வேலையைப் பகிர்ந்தது. அடுத்து மாநிலமாக ஆக்கி பெரும்பாலான வேலையிலிருந்து தன்னைக் கழற்றிக் கொண்டது. அதுதான் சரி. அப்படிச் செய்தபோது காவல் பொறுப்பையும் மாநில அரசிடமே ஒப்படைத்திருக்க வேண்டும். வேண்டுமானால் பிரதமர் , குடியரசுத்தலைவர் வளாகங்கள், வெளி நாட்டு தூதரகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் வரையில் மட்டும் தனியே தன் துணை ராணுவப் படையைக் காவலில் வைத்திருக்கலாம். மீதி எல்லா இடங்களையும் மாநில அரசின் பொறுப்பில் விட்டிருக்கவேண்டும். இதை செய்யும்படி இதற்கு முன்பு பல முதல்வர்கள் கடிதம் எழுதியும் கோரியும் நடவடிக்கையே இல்லை. எனவேதான் ஆம் ஆத்மி தெருவுக்கு வந்து போராடவேண்டியதாயிற்று.

மூன்றாவது அம்சம் ஒத்துழைக்காத காவல் துறையால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்துவிடமுடியுமா என்பதாகும். காவல் துறை உண்மையில் சுயேச்சையாகவும் இல்லை. மத்திய , மாநில அரசுகளின் பிடியிலிருந்து விடுவித்து காவல் துறைக்கு சுயாட்சி அதிகாரமும் அதன் கூடவே மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்துடனான கண்காணிப்பு அமைப்பையும் ஏற்படுத்த வேண்டுமென்று பல பரிந்துரைகள் வந்துவிட்டன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூட இருக்கிறது. அதையெல்லாம் நிறைவேற்றாமல் காவல் துறை ஆட்சியிலிருக்கும் கட்சியின் ஏஜண்ட்டாக செயல்படுவது என்ற போக்கே நம் நாட்டில் பெரும்பலானன நிலைமை. அதுவும் மாறவேண்டும்.

2 கால் நூற்றாண்டுக்கும் மேலாக சென்னை புத்த்கக் கண்காட்சிக்கு போகிறீர்கள். இந்த ஆண்டு கண்காட்சி நமக்கு சொல்லும் செய்தி என்ன? – பிரிட்டோ மதுரை.

ஆரம்பித்து 37 வருடங்களாகத் தவறாமல் போகிறேன். பத்து வருடங்களுக்கும் மேலாக அங்கே நானே அரங்கு நடத்துகிறேன். சென்னைப் புத்தகக் காட்சியில அரங்கு வைத்த முதல் தமிழ்ப் பத்திரிகை என் இதழ்தான். 1986ல் சென்னை நகருக்கென்று ஏழு நாட்கள் என்ற வார இதழை நடத்தியபோது அதற்கென்று அரங்கு வைத்தேன். பின்னர் தீம்தரிகிட இதழுக்கு அரங்கு நடத்தினேன். பின்னர் தொடர்ந்து என் ஞானபாநு பதிப்பகம் சாபாக அரங்கு நடத்திவருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இந்த அரங்கில் மக்களிடம் தினசரி தேர்தல் நடத்தி ஏதேனும் ஒரு பொது விஷயம் குறித்த கருத்துக் கணிப்பைச் செய்து வருகிறேன்.

சென்னை புத்தகக் காட்சிதான் இன்று தமிழகத்திலேயே பெரியது. இதன் உந்துதலால்தான் பிற நகரங்களில் இத்தகைய காட்சிகள் தொடங்கப்பட்டன. மிக சிறிய எண்ணிக்கையிலான கடைகளுடன் தொடங்கிய சென்னை நிகழ்வு இன்று பிரும்மாண்டமாகிவிட்டது. புத்தகக்காட்சியில் சுற்றிவந்தால் நம் சமூகத்தின் ஒரு மினியேச்சர் அது என்பதை உணரலாம். எதிரெதிரான ரசனைகள், கருத்துகள், சித்தாந்தங்கள் எல்லாவற்றுக்கும் அங்கே இடம் இருப்பதை பார்க்கலாம். நம் சமூகமும் அப்படித்தானே இருக்கிறது. ஒரே இடத்தில் இத்தனையையும் பார்க்க ஒருவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு முக்கியமானது. ஆயுள் முழுக்க இன்னொரு பார்வை என்ன என்றே தெரியாமலே வாழ்ந்து முடித்துவிடக்கூடிய உலகில், இங்கே பிற பார்வைகளை ஒரு வாசகர் பரிச்சயமேனும் செய்ய வாய்ப்பிருக்கிறது. அது மாற்றத்தைக் கூட ஏற்படுத்தலாம். ஆர்மப ஆண்டுகளை விட இப்போது நான் அதிகம் கவனிக்கும் மாற்றம், பலரும் குடும்பம் குடும்பமாகக் குழந்தைகளுடன் வந்து நூல் வாங்குவதாகும், இதை ஆரோக்கியமான வளர்ச்சியாகவே பார்க்கிறேன். சிறுவர் சிறுமியருக்கு நூலை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லாமல், அவர்களுக்கான பட்ஜெட் தொகை இது என்று கொடுத்துவிட்டு அவர்களையே நூல்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், நிச்சயம் அந்த நூல்களை தவறாமல் படிப்பார்கள் என்ற என் பிரசாரத்தைப் பல பெற்றோரும் பின்பற்றுவதைக் கண்டேன்.

புத்தகக்காட்சி இந்த ஆண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முன்னேறியிருந்தது. அதே சமயம் இந்த வளர்ச்சி, பெரும் வணிகர்களுக்கு மட்டுமே உதவுவதாக ஆகிவிடாமல், சிறு பதிப்பாளர்களுக்கும் உரிய இடம் இருப்பதாக நீடிப்பது அவசியம். சென்னைப் புத்தகக் காட்சி 37 வருடம் முன்னர் தொடங்கப்பட்டபோது அதை பெரிதும் வளர்த்தவர்கள் சிறு பதிப்பாளர்களே.

3 மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் சென்னையில் பெண்கள் கவுரவமான உடை அணிவதாலும், ஆலயங்களுக்கு சென்று பக்தியோடு இருப்பதாலும்தான் இங்கு பாலியல் வன்முறைகள் குறைவாய் இருப்பதாகவும், அவரது மாநிலத்தில் பெண்கள் அப்படி இல்லாததால்தான் பாலியல் அசம்பாவிதங்கள் நடை பெறுவதாகவும் சொல்லி இருக்கிறார். இது பெண்களை இழிவு செய்யும் கூற்றாகாதா ? – அன்பு சென்னை.

ஊழல் அரசியல்வாதிகளோடு சேர்ந்து உளறல் அரசியல்வாதிகளும் நாளுக்கு நாள் பெருகிவருகிறார்கள். இப்படிப்பட்ட அமைச்சர்களை எல்லாம் நாடு சகித்துக் கொள்ளத் தயாராய் இருந்தால்தான், பிஜேபி போன்ற கட்சிகளை ஆட்சியில் அமர்த்த முடிவு செய்யலாம்.  பாலியல் வன்முறையில் ஆண்களின் பங்கு என்ன என்பதைப் பற்றியே இந்த அமைச்சருக்கு துளியும் அறிவும் இல்லை. அக்கறையும் இல்லை என்றே தோன்றுகிறது. பக்திக்கும் குற்றமின்மைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. எல்லா சிறைச்சாலைகளிலும் நிரம்பியிருக்கும் குற்றவாளிகளில் மிகப் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கையும் பக்தியும் உடையவர்கள்தான். நாத்திகர்கள் அல்ல. தன் மாநிலப் பெண்கள் கவரவமில்லாத உடை அணிவதாகவும், பக்தியில் குறைவாக இருப்பதாகவும் கருதும் அமைச்சரால் எந்த நாளும் அந்த மாநிலப் பெண்களுக்கு எந்த நியாயமும் நன்மையும்  செய்யமுடியாது. பாலியல் குற்றத்துக்கும் உடைக்கும் வயதுக்கும் தொடர்பே இல்லை என்று பல முறை நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆண் பெண் உறவு பற்றிய முழு அறியாமையும், தவறான கருத்தியல் வளர்ப்புமே பாலியல் குற்றத்துக்கான் ஆணிவேர்கள்.

4 கருணை மனு நிராகரிக்கப் பட்ட 14 நாட்களுக்குள் தூக்கு தண்டனையை நிறை வேற்றாவிட்டால் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து விடவேண்டும் என்று ஒரு தீர்ப்பு வந்திருக்கிறதே. நல்லது நடக்குமென்று தமிழர்கள் எதிர் பார்க்கலாமா?இப்படி ஒரு தீர்ப்பு இருக்கிற காரணத்தால் அவசர அவசரமாக தூக்கினை நிறைவேற்றும் நடைமுறை வருமா? – அருள்மொழி, கீரனூர்.

கருணை மனு  நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டுமென்பது ஆபத்தான விளைவுதான். பேரறிவாளன் சொல்லாததை நான் சேர்த்து எழுதினேன் என்று ஒரு அதிகாரி பல பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒப்புக் கொள்ளும் நிலையில், 14 ஆட்களில் தூக்கில் போட்டிருந்தால் அது எத்தனை பெரிய கொடுமையாக அநீதியாக இருக்கும். உச்சமான தண்டனை ஆயுள் தண்டனை மட்டுமே என்று ஆக்கிவிட்டால், இந்த சிக்கல்கள் ஏதுமில்லை. பல வருடம் கழித்து தண்டனை விதித்தது தவறென்றே தெரியவந்தாலும் , பாதிக்கப்பட்ட நபர் உயிரோடு வெளியே செல்லும் வாய்ப்பாவது இருக்கும். அந்த முடிவை நோக்கி உச்ச நீதிமன்றமும் இந்திய அரசும் அடுத்த கட்டத்தில் நகர்வார்கள் என்று நம்புகிறேன்.

இப்போதைக்கு இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஒரு அடி முன் நோக்கிய பாய்ச்சல்தான். தண்டனை நிறைவேற்ற ஆன காலதாமதத்தினால், தண்டனையே ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவேண்டும் என்பது பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது. அதில் தொடர்ந்து காப்பாற்றப்படும் உயிர்களில்  ராஜீவ் கொலை வழக்கு தண்டனைக் கைதிகள் மட்டுமல்ல, தர்மபுரி பஸ் எரிப்பு தண்டனைக் கைதிகளும் கூட சேரும் வாய்ப்பு உள்ளது. குற்றம் என்னவாக இருந்தாலும், மரண தண்டனை என்பதே இல்லாமற் போகவேண்டுமென்பதே என் உறுதியான கருத்து. புத்தகக் காட்சியில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை தரிசித்த யாரும் இனி மரண தண்டனையே இல்லாத  உலகே நமக்கு வேண்டுமென்றே நினைக்கமுடியும்.

காக்கைச் சிறகினிலே – பிப்ரவரி 2014.

கண்டதைச் சொல்லுகிறேன்: யாருக்கும் வெட்கமில்லை…

5.2.2014 : அரசு உளவுத் தலைவர் ஜாஃபர் சேட் கனிமொழி, ஷரத் ரெட்டி, சண்முகநாதன் ஆகியோருடன் பேசியதாக வெளியாகியிருக்கும் தொலைபேசி உரையாடல்கள் அருவெறுப்பை ஏற்படுத்துகின்றன. இந்த அமைப்பு எவ்வளவு புழுத்துப் போயிருக்கிறது, இதில் தலைவர்களாக நடமாடுவோர் எவ்வளவு அயோக்கியர்கள் என்பதற்கெல்லாம் இது ஒரு பருக்கை உதாரணம்.

கருணாநிதி குடும்பம் மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.கவின் ஜெயலலிதா,சசிகலா, இன்னும் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் போன் பதிவுகளை நாம் கேட்கும் வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் அல்ல, நாம்தான் இவர்கள் மத்தியில்  உயிர் வாழ்வதை விடத் தற்கொலை செய்துகொண்டு செத்துவிடலாம் என்று நினைப்போம். அவ்வளவு புழுத்துப் போயிருக்கிறது இங்குள்ள அரசியல் அமைப்பு.

ஸ்பெகட்ரம் ஊழலில் தொடர்புடைய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கனிமொழியும் போலி பாதிரி கஸ்பாரும் நடத்திய சங்கமம் நிகழ்வுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளிக் கொடுத்திருக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டை வளர்ப்பதில் அவர்களுக்கு அக்கறையா என்ன ? சங்கமம் நடத்திய தமிழ் மையத்தின் ‘அற’ங்காவலரில் ஒருவர் கட்சி விட்டு கட்சி தாவிக் கொண்டே இருக்கும் மாஃபா பாண்டியராஜனின் மனைவி. பாண்டியராஜன் பிஜேபி, தே.மு.தி.க என்று தாவி இப்போது அதிகாரப்பூர்வமில்லாத அம்மாவின் ஜால்ராவாக டிவிகளில் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படி கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, சாதி விஸ்வாசம், பண மோகம் இவற்றால் மட்டுமே உந்தப்பட்டு திரைக்குப் பின்னே ரகசியக் கூட்டணி நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள், பெருவணிகர்கள் சிலரின் முகங்கள் இப்போது அம்பலமாகியிருக்கின்றன. இன்னும் நிறைய பாக்கி இருக்கிறது.

இப்படிப்பட்ட மோசடி கும்பலுடன் இலக்கிய உறவு என்ற பெயரால் கொஞ்சிக் குலாவிய தூய இலக்கியவாதிகள் முதல் போராளி இலக்கியவாதிகள் வரை எல்லாரும் கொஞ்சமேனும் நேர்மையிருந்தால், மக்களிடமும் வாசகர்களிடமும் பகிரங்கமாக இப்போது வெளிவந்து வருத்தமும் மன்னிப்பும் கோரவேண்டும். மாட்டார்கள். அடுத்த வாய்ப்பு எங்கே எப்போது எப்படி யாருடன் என்ற திட்டமிடலில்தான் இருப்பார்கள். ஊழலும் சூழ்ச்சியும் அரசியல்வாதிகளுக்கும் உளவு அதிகாரிகளுக்கும் மட்டும் ஏகபோகம் அல்ல.

————–

உண்ணாவிரதம் ஒரு வீண் போராட்டம்.

4.2.2014: உண்ணாவிரதம் என்பது யாருக்கும் எதற்கும் பயன்படாத போராட்டவடிவமாக இன்று உள்ளது. ஏற்கனவே துயருறும் மக்கள் உண்ணா விரதமிருந்து மேலும் தம்மைத்தாமே வருத்திக் கொள்வதில் ஒரு அர்த்தமுமில்லை. காந்தி காலத்தில் உண்னாவிரதத்துக்கு இருந்த பலம் இன்று துளியும் கிடையாது. ஐரம் ஷர்மிளாவை விடவா நீண்ட கால உண்ணாவிரதப் போராட்டத்தை வேறு எவரும் செய்துவிடமுடியும் ? கூடங்குளம் மக்களும் அவர்களை வழிநடத்தும் உதயகுமாரும் இதர தோழர்களும் உண்ணாவிரத வடிவத்தையே கைவிடவேண்டும். அரசுடன் ஒத்துழையாமை என்ற அறவழிப்  போராட்ட வடிவம் ஒன்றே இன்று கொஞ்சமேனும் பயன் தரத்தக்கது.

———